ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், 'கூட்டணி வேறு, கொள்கை வேறு' என தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தை வலியுறுத்தி இருக்கிறோம். காங்கிரஸ் சொல்லுகின்ற எல்லாவற்றையுமே நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. அவரவருக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அவரவர்களுக்கு ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதைப் பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை.
தி.மு.க தலைமை தெளிவாகச் சொல்லி விட்டது. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறார்கள் எனத் தெரிந்துதான், இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டோம்" என்றார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "7 பேரின் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அவர்களுக்கு அரசியல் கட்சியினர் விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை செய்தவர்களைக் குற்றவாளிகள் என்றே கருதவேண்டும். தமிழர்கள் என அழைப்பது சரியல்ல. கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால் தமிழகத்தில் காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் வேண்டாம், சட்டம் - ஒழுங்கைப் பற்றிப் பேச வேண்டாம் என்பதுதானே பொருள். இந்தியாவிற்குக் கேடு விளைவித்தவர்களுக்குப் பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.