அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதன்கிழமை பெங்களூவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
இரண்டு கட்சிகளுடன் எங்களால் கூட்டணி செல்ல முடியாது. ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம், ஏனென்றால் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்ததே திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தான். அம்மா அவர்கள் 30 வருடமாக தலைமையேற்று கழகத்தை வழிநடத்தியதே திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தான். அவர்களிடம் உறவு வைத்து கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது. அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவது தற்கொலை முயற்சிக்கு சமம். எங்களின் பிரதான எதிர்கட்சியே தி.மு.க. தான்.
இரண்டாவதாக மதவாதம் பேசுபவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக தமிழக மக்கள் வெறுக்கின்ற பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க முடியாது. பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு பிரதமர் வந்தபோது நம் நாட்டின் பிரதமர் அவருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று நான் சாதாரணமாக சொன்னதைகூட பா.ஜ.க.விற்கு தினகரன் பாய்ந்துவிட்டார் பின்வாங்கிவிட்டார் என்றார்கள். ஏற்கனவே சொல்லியதை திரும்பவும் சொல்கிறேன். எப்போதும் மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது. இவ்வாறு கூறினார்.