லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் லியோ திரைப்படத் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள், சென்னையில் உள்ள உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். லியோ திரைப்படத்திற்கு காலை 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு 'செவன் ஸ்க்ரீன்' பட நிறுவன வழக்கறிஞர்கள் வேலூர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உள்துறை செயலாளர் அமுதாவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் குழு தெரிவிக்கையில், ''இப்பொழுது எங்களுக்கு தேவை ஐந்து காட்சிகள் திரையிடலாம் என்று சொல்லி இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் ஷோவின் டைமிங் மென்ஷன் பண்ணியதால் சிக்கலாகிறது. முதல் ஷோ 9 மணி என மென்ஷன் பண்ணியதால் ஒன்பதில் இருந்து ஒன்றரை மணியில் எங்களால் எதுவும் பண்ண முடியாது. அதனால் கால இடைவெளி பத்தாது என்று சொல்லித்தான் மனு கொடுத்துள்ளோம்.
7 மணிக்கு ஷோ ஆரம்பிக்க அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களில் காலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி உள்ளது. பார்வையாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள். நீதிபதி அவர்கள் சொல்லும் போது குறிப்பிட்டு சொன்னார். 250 பேரை ஒரு நிமிடத்தில் வெளியே போகச் சொல்லி விரட்ட முடியாது. அதேபோல 250 பேரை உடனடியாக உள்ளே சென்று சீட்டில் உட்காருங்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் டூவீலர்களில் கார்களின் வருவார்கள். அதை பார்க் செய்துவிட்டு உள்ளே வரவேண்டும். பின்னர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கார், டூவீலர்களை எடுத்துக்கொண்டு வெளியேற வேண்டும். அப்படி இருசக்கர வாகனங்களை எடுத்தால் தான் அடுத்த ஷோ பார்க்க வருபவர்கள் உள்ளே வர முடியும். அதற்கான கால இடைவெளி வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். பெரியவர்கள் இருப்பாங்க, சுகர் பேஷண்ட் இருப்பாங்க. அவர்களுக்கு யூரின் ப்ராப்ளம் இருக்கும். அதற்கெல்லாம் டைம் கொடுக்க வேண்டும் அல்லவா. 5 ஷோவிற்கான அனுமதி கொடுத்தாச்சு. அதற்கான கால இடைவெளி அதிகம் வேண்டும் என கேட்கிறோம். கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றனர்.