காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழக அரசு, மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், "மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என உத்தரவு இருந்தும் அது மீறப்படுகிறது. கர்நாடகா சார்பில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு ஏற்கப்பட்டுள்ளது. எனவே, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா விவாதிக்க தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தால், விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மேகதாது அணை குறித்து விவாதிக்க அதிகாரம் உள்ளது என்ற ஆணையத்தின் கருத்து முரண்பாடாக உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தைப் பற்றி விவாதிக்க எதிர்ப்பு பதிவு செய்யப்படும். 17 ஆம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எதிர்ப்பு பதிவு செய்யப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.