கனமழையால் தேனி மாவட்டத்திலுள்ள போடிமெட்டு உள்ளிட்ட பல இடங்களில் மண் சரிவால் பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போடி - மூணாறு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தமிழகம் - கேரளாவை இணைக்கும் வழித்தடமான போடி - மூணாறு ரோட்டிலிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளுடன், 22 கிலோ மீட்டர் தொலைவில் போடிமெட்டு மலைப்பகுதி உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 844 அடி உயரத்தில் உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் 24 அடி அளவிற்கு அகலப்படுத்தப்பட்டது.
பாறைகளுக்கு வெடி வைப்பதாலும் மழையாலும் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போடி போக்குவரத்து துண்டிக்கப்படும். ஓராண்டாக பெரிய அளவில் மழை இல்லாததால் மண்சரிவு ஏற்படவில்லை. ஆனால், கடந்த 5 நாட்களுக்கு மேலாக தமிழக கேரளப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால், நேற்று முன்தினம் (09.05.2021) இரவு பெய்த மழையால் 5வது கொண்ட ஊசி வளைவு, பிஸ்கட் வளைவு உள்ளிட்ட பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்தன. தடுப்புகள் உடைந்து ரோடு பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் போடி 36 போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாறைகள் அகற்றப்படும் பணி நடக்கிறது. அதோடு போடிமெட்டு முந்தல் செக்போஸ்ட்டில் வாகனங்கள் செல்லாத வகையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.