கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் காவல்நிலைய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
வேப்பூரில் ஐந்து வீடுகளில் கொள்ளை, களத்தூர் கிராமத்தில் இரு வீடுகளில் கொள்ளை என
அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. கடந்த 21-ஆம் தேதி இரவு நல்லூர் அக்ரஹார தெருவில் ஆசிரியை தேன்மொழியின் வீட்டு பின்பக்க கதவு வழியாக வீட்டினுள்ள புகுந்த கொள்ளையர்கள் அவரது 10 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றனர்.
இந்த சம்பவங்களின் அடிப்படையில் தொடர் திருட்டுகளில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ உத்தரவின்பேரில், திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் மேற்பார்வையில், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அதையடுத்து இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய ஐவதுகுடி சமத்துவபுரத்தில் வசித்து வந்த மாரிமுத்து மகன் சுப்பிரமணியன்(48) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தனது மைத்துனரான சஞ்சய்காந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து நல்லூர் தேன்மொழி, சேப்பாக்கம் செல்வி, கீழ்ஒரத்தூர் சந்தியா, நாரையூர் ரவிச்சந்திரன், கொத்தனூர் ரவிச்சந்திரன், ஆதியூர் தீபிகா, எ.கொளத்தூர் கோவிந்தராஜ் மற்றும் எழிலரசி உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் விசாரணையின் போது சுப்பரமணியன், ஒரு ஊருக்கு திருட செல்வதற்கு முன்பாக பகல் நேரங்களில் காய்கறிகள், பாத்திரங்கள் விற்பது போல சென்று வீடுகளை நோட்டமிட்டு பின்னர் இரவு நேரங்களில் திருடியதாக கூறியுள்ளார். கொள்ளை கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்த சுப்பிரமணியத்திடம் இருந்து 84 கிராம் தங்கம் கால் கிலோ வெள்ளி கொலுசுகள் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கெங்கு கொடுத்துள்ளார் என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். அவரது கூட்டாளியான மணிகண்டன் மற்றும் சஞ்சய் காந்தியும் தேடிவருகின்றனர்.
அதேசமயம் வேப்பூர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஐந்து வீடுகளில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றை கொள்ளையடித்த கும்பலை போலீசார் இதுவரை பிடிக்கவில்லை தற்போது பிடிபட்டுள்ள கும்பலுக்கும் மேற்கண்ட கொள்ளை சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என தெரியவில்லை. அந்த கொள்ளைகள் குறித்து விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதனிடையே சுப்பரமணியன் மற்றும் கூட்டாளிகள் மீதான திருட்டு வழக்குகள் பொய்யானவை என சுப்பரமணயனின் மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.