கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20/08/2021) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
பள்ளிகள் திறந்தால் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றியும், 9,10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை 50 சதவீத மாணவர்களுடன் திறப்பது பற்றியும், திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தபடி திரையரங்குகளைத் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.