![lavanya3](http://image.nakkheeran.in/cdn/farfuture/uSW32SzUtpYr3mSQnoPx6U6DFTNV6kr9CCIsoGmQZLE/1533347658/sites/default/files/inline-images/lavanya3.jpg)
வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சென்னை பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் கடந்த 12.02.2018 அன்று இரவு நடந்த வழிப்பறி சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் தாக்கியதில் ஐ.டி. ஊழியர் லாவண்யா படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மருத்துவமனையில் கமிஷ்னர் விஷ்வநாதன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த மென்பொறியாளர் லாவண்யா இன்று (11.05.2018) காலை காவல் ஆணையரகத்திற்கு வருகை தந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, கூடுதல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், காவல் இணை ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, சி.மகேஸ்வரி, துணை ஆணையர் எம்.எஸ்.முத்துசாமி, நுண்ணறிவுப்பிவு துணை ஆணையர்கள் ஆர்.திருநாவுக்கரசு, எஸ்.விமலா மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. அதில் இருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய மன உறுதிதான் காரணம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய மன உறுதி ஒரு சதவீதம் தான் காரணம். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு அளித்த ஆதரவு தான் நான் மீண்டு வந்ததற்கு காரணம்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இரண்டு ஆய்வாளர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி என்றார்.