விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் தமிழருவி, அதே கட்சியைச் சேர்ந்த சிலரால் கொடூர ஆயுதம் கொண்டு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
விசிகவின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் தமிழருவி. இவர் நேற்று முன்தினம் கும்பகோணம் கடைவீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு போன் வந்தது, அதை எடுத்து பேசிய தமிழருவி, எதிர்முனையில் பேசியவர் உங்களிடம் உடனே கட்சி விஷயமா பேச வேண்டும் எங்கே இருக்கீங்க என்று கேட்டதும், தமிழருவியோ உப்புக்கார தெருவில் பேற குழந்தைக்கு சைக்கிள் வாங்க வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து பத்து நிமிடத்தில் காரில் வந்த மர்ம நபர்கள் திடுதிடுவென இறங்கி தமிழருவியையும் அவரது மகன் ஹரி கிருஷ்ணனையும் உறவினர்கள் பிரகாஷ், கார்த்திக்கையும் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். இதில் தமிழருவியும் அவரது மகனும் படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் கீழே கிடந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தமிழருவி கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கும்பகோணம் பாத்திமாபுரத்தை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர பொறுப்பாளர் அலெக்ஸ் என்பவரை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தென்னவன், விமல் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை எட்டியிருந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், தமிழருவியையும் அவரது மகனையும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.