தஞ்சை கீழவாசல் குறிச்சி தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், 43 வது வாக்குச்சாவடியில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 846 வாக்குகள். காலை 11.30 மணி அளவில் 314 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அப்போது இயந்திரத்தை சரி பார்த்த போது முகவர்களுக்கு அதிர்ச்சியானது. காரணம் 360 ஓட்டுகள் பதிவாகி இருப்பதாக இயந்திரம் காட்டியது.
இதனால் வாக்குச்சாவடியில் இருந்த அரசியல் கட்சி முகவர்கள் 46 ஓட்டுகள் எப்படி கூடுதலாக வந்தது? என்று கேள்வி கேட்டதும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ்க்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்து அரசியல் கட்சியினரும் திரண்டனர்.
தேர்தல் அதிகாரி சுரேஷ் அங்கு வந்து விசாரணை செய்தார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் தொடங்கும் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதை நீக்கவில்லை. அதனால் இந்த குளறுபடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பதிவான இயந்திரத்தை சீல் வைத்து விட்டு, புதிய இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் சுமார் 1 மணி நேரம் வாக்காளர்கள் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.