நகைக் கடை அதிபர் ஒருவர் திருச்சியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியதுடன் அங்கு தனது குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இ்ந்த தற்கொலை முயற்சியில் நகைக்கடை அதிபரை தவிர மற்ற மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 47). இவர் அந்த கிராமத்தில் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும், நிகில் (வயது 20), முகில் (வயது 14) என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க வந்ததாக கூறி மேலப்புலியூர் ரோட்டில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
அறை எடுத்து தங்கி அவர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், கதவை திறந்து பார்த்தபோது பூட்டிய அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நான்கு பேரும் கிடந்தனர். அதில் மனைவி செல்லம் மகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். நகைக்கடை அதிபர் செல்வராஜ் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லைக் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? தற்கொலைக்கு வேறு என்ன காரணம் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி, தஞ்சாவூர் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.