தமிழர்களின் கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றிவரும் தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவால் மாவட்டம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளும், ஆன்மீக பக்தர்களும், சாரை சாரையாக வந்த வண்ணமே இருக்கின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை பெருவுடையார் கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் நினைவிடமாக குறிப்பிடப்படும் உடையாளூர் பகுதி எப்படி இருக்கிறது என்பதை அறிய அங்கு பயணித்தோம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து தெற்கு நோக்கி ஆறாவது கிலோமீட்டரில் இருக்கிறது உடையாளூர் என்கிற கிராமம். அந்த கிராமத்திற்கு செல்லும் வழியிலேயே இடதுபுறமாக சின்னதாக ஒரு தகவல்கூறும் பிளக்ஸ் போர்டு ஒன்று மரத்தில் தொங்கியது, இருபுறமும் வீடுகள் நெருக்க, குருகலான வழியில் ராஜராஜசோழனின் நினைவிடத்தை நோக்கி சென்றோம், அந்த இடத்திற்கு சென்றதும் நமக்கு பகிர் என்று ஆனது. வயதான இரண்டு பாட்டிகள் நெல்லை உலர்த்திக்கொண்டு தலையை கோதிக்கொண்டிருந்தனர் மற்றபடி யாரும் வந்து போனதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
பெருவுடையார் கோயில் மூலம் உலகம் முழவதும் உள்ள தமிழர்கள் கட்டிடக்கலையில் மார்தட்டிக்கொள்ள செய்த பேரரசன் ராஜராஜ சோழனின் இறுதிகாலம் குறித்தான சந்தேகம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அவரது உடல் உடையாளூரில் தான் அடக்கம் செய்யப்பட்டது என பேசப்படுகிறது. இந்த விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம், ஆய்வு செய்ய உத்தரவிட்டது, அதன்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ராஜராஜசோழனின் சமாதி இங்குதான் உள்ளது என பலதரப்பட்ட மக்களும் நம்புகின்றனர், மற்ற விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் சமாதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் தஞ்சை கோயிலுக்கு வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடக்க இருக்கிறது, அதற்காக யாகபூஜைகள் மூன்று நாட்களாக நடந்து வருகிறது. பாதுகாப்புகள் பலபடுத்தப்பட்டு கலர் சீரியல் லைட்டுகளால் ஜொலித்து வருகிறது. ஆனால் அந்த கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் சமாதியோ லைட் இல்லாமல் கிடக்கிறது.
இதுகுறித்து அங்கு நெல் உலர்த்திக் கொண்டிருந்த வயதான பாட்டிகள் காளியம்மாள், கன்னியாயிடமும் கேட்டோம், "தினசரி யாராவது ஒருவர் வெளியூரிலிருந்து சமாதியை பார்க்க வருவாங்க ஆனா நாளைக்கு தஞ்சாவூர்ல கும்பாபிஷேகம், இங்க கூட்டம் தாங்காதுன்னு நினைத்தோம், ஆனா ஒரு காக்கா குருவிக்கூட வரல," என்றனர்.
பூசாரி நடராஜனோ, "அந்த காலத்தில் இந்த பகுதியை காடாக இருந்தது, ராஜராஜ சோழன் தனது இறுதி காலத்தின் இங்கு பழையார் எனும் இடத்தில் அரண்மனைக்கட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளார். தஞ்சை கோயிலை போலவே பழையாரில் சோமநாதர் கோயிலையும் கட்டி வழிபட்டிருக்கிறார். அந்த கட்டிடம் தற்போது முண்டம்போலவே இருக்கிறது, மீதமுள்ள பகுதி சிதைந்து கிடக்கிறது. தஞ்சை குடமுழுக்குக்காக, கோபுரத்தின் மீது இருந்த செடிகொடிகளை சுத்தம் செய்திருக்காங்க, அங்கு வாழ்ந்த அரசனின் உடலை ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இந்த உடையாளூரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றனர். குடமுழுக்கு முடிந்ததும் இங்கு கவனம் செலுத்துவார்கள் போல தெரிகிறது." என்கிறார்.
பல கோடி ரூபாய் செலவில் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடந்துவருகிறது, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கோயிலை கட்டிய மாமன்னனின் சமாதிக்கு ஒரு லைட் போடவில்லையே என்பதே தமிழ் ஆர்வலர்களின் வருத்தமாக இருக்கிறது.