ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். சென்னிமலை முருகன் கோவிலில் சென்ற 31ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கியது. பின்னர் மயில் வாகனக்காட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி மயில் வாகனக்காட்சி, யானை வாகனக்காட்சி, கைலயங்கிரி மற்றும் காமதேனு வாகனக்காட்சி உட்பட பல்வேறு அலங்காரங்களில் முருகப்பெருமானின் திருவீதி உலா நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் வள்ளி&தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 6.10 மணிக்கு சாமிகளை தேர் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தேரை 3 முறை வலம் வந்து சாமிகளை தேரில் அமர வைக்கப்பட்டு தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
காலை 6.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.டி.தோப்பு வெங்கடாச்சலம் உ.தனியரசு,கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு,வி.பி.சிவசுப்பிரமணியம் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ ஆகியோருடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரை வடம் பிடித்து இழுத்து காலை 6.50 மணிக்கு தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தினார்கள்.
மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்த்தப்பட்டது. வருகிற 12 ந் தேதி புதன்கிழமை மாலை மகா தரிசனம் நடைபெறுகிறது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னிமலையில் குவிந்துள்ளனர்.