கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் வீதி. இங்கு தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்படுகிறது. இந்த மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி நர்மதா(21) என்பவர் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறியுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் வந்துள்ளார். அவரிடம் நர்மதா தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.
அந்த இளைஞரும் நர்மதா சொன்ன தொகையை அவரது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தையும் ஏடிஎம் கார்டையும் இளைஞரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியே சென்ற அரை மணி நேரத்தில் நர்மதாவின் செல்போனுக்கு மேலும் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நர்மதாவிற்கு அப்போதுதான் தன்னிடம் அந்த இளைஞர் கொடுத்த ஏடிஎம் கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக நர்மதா திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நர்மதா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெரியார் நகர் அருகே சந்தேகப்படும் அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பதும் இவர்தான் நர்மதாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த இளைஞரை ஓரிரு நாட்களில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.