பாதுகாப்பு துறையில் கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்தும், பாதுகாப்பு துறை தனியார்மயமாவதை எதிர்த்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நேற்று (08.07.2021) நாடு தழுவிய அளவில் கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு, கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசு, இந்திய நாட்டின் 220 வருட பழமை வாய்ந்த, பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கிவரும் தளவாட தொழிற்சாலைகளை 7 ஆக பிரித்து தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் அரசு ஏற்படுத்திக்கொண்ட அனைத்து ஒப்பந்தங்களுக்கும் விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்காததாலும், பேச்சுவார்த்தையிலும் சரியாக கலந்துகொள்ளாததாலும் பாதுகாப்புத்துறையில் செயல்படும் தொழிற்சங்க சம்மேளனங்கள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன. இந்நிலையில், பாதுகாப்பு துறை ஊழியர்கள் / தொழிலாளர்களை அடக்கியாளும் நோக்கில் பாதுகாப்புத் துறையில் வேலைநிறுத்தத்தைத் தடைசெய்து ஒரு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவர் கொண்டுவந்துள்ளார்.
அதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு விசாரணை இன்றி வேலை நீக்கம், அபராதம், சிறை தண்டனை என ஆபத்தான சட்டமாக அமைந்துள்ளது. இந்தக் கருப்புச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பாதுகாப்பு துறை சங்கங்கள் நேற்று கருப்பு தினமாக கடைப்பிடித்திட முடிவு செய்தன. போராட்டக் களத்தில் நிற்கும் பாதுகாப்பு துறை தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நாடு தழுவிய கண்டன இயக்கங்களை நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை முடிவு செய்தன.
அதனடிப்படையில், புதுச்சேரியில் மிஷன் வீதி வ.உ.சி பள்ளி அருகில் AITUC, CITU, INTUC, AICCTU, LLF, MLF, AIUTUC ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.