பொன்னமராவதியில் நேற்று இரவு தொடங்கிய மக்கள் போராட்டம் அடுத்தடுத்த கிராமங்களில் பரவி திருமயத்தில் சாலை மறியல் நடந்துள்ளது. பொன்னமராவதி வழித்தடங்களில் மரங்கள் வெட்டிப்போடப்பட்டும் தடுப்புகளை ஏற்படுத்தியும் போக்குவரத்து முடக்கப்பட்டது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலிசார் தடியடி நடத்திய நிலையில் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பல போலீஸ் வாகனங்கள் கண்ணாடி உடைந்தது. மேலும் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை வழக்கின்றி விடுதலை செய்ய வேண்டும் ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மீண்டும் மக்கள் திரண்டு வருகின்றனர்.
மேலும் போலிஸ் வாகனங்களும் வஜ்ரா வாகனங்களும் பொன்னமராவதி நோக்கி செல்கின்றன. கலவரக்காடாக மாறியுள்ளது பொன்னமராவதி. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
>
இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவின் பேரில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதியை சுற்றியுள்ள குழிபிறை, பனையப்பட்டி ஆகிய இடங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அவதூறு பரப்பியதாக இருவர் மீது பொன்னமராவதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.