Skip to main content

கண்களைக் கசிய வைத்த தலையாரியின் மனித நேயம்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

அரசின் அடிமட்டப் பணியாளராக இருக்கும் ஒரு கிராமத் தலையாரியின் ஏழைக்கு இரங்கல் மனித நேயம் கேட்பவர்களின் கண்களில் ஈரம் கசிய வைத்திருக்கிறது.
 

தென்காசி மாவட்டத்தின் சுரண்டைப் பகுதியிலுள்ள வி.கே. புதூரைச் சேர்ந்தவர் குமரேசன். ஆட்டோ டிரைவர். அண்மை நாட்களாக உடல் நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இவரைப் பரிசோதித்த தனியார் டாக்டர், அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர அனுமதிக் கடிதம் கொடுத்தார். இதையடுத்து கடந்த 12ம் தேதியன்று தன் பெற்றோருடன் சிகிச்சைக்குச் செல்லும் பொருட்டு சுரண்டைப் பேருந்து நிலையம் வந்த அவரால் பேருந்தில் பயணிக்கிற அளவுக்கு அவரது உடல்நிலை சீராக இல்லாமலிருந்தது. அவரது தந்தை நகவநீத கிருஷ்ணன் 108 க்குப் போன் செய்தார். நீண்ட நேரமாகியும் 108 வரவில்லை.
 

இதனால் குமரேசன் நிலை குலைந்தார். தகவலறிந்த வி.கே.புதூர் தாசில்தார் கேட்டுக் கொண்டதின் பேரில் அங்கு விரைந்து வந்த குலையநேரி கிராம உதவியாளரான தலையாரி கணேசன், இரவு 9 மணி வரை 108 ஆம்புலன்ஸ் வராததால், காவலர் சமுத்திரக் கனியின் உதவியுடன் தனது சொந்தச் செலவில் குமரேசனை வாடகைக் காரில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன். இந்தாங்க. இத, மருத்துவச் செலவுக்காக வைச்சுக்கோங்க என்று பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தார். தலையாரியின் இந்த மனித நேய சம்பவத்தைப் பார்த்த, கேள்விப்பட்டவர்களை இயல்பாகவே பாராட்ட வைத்திருக்கிறது. அதன்பின் 2 மணி நேரம் கழித்து 108 வந்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்