தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. நேற்றைய தினம் விடுமுறை என்பதாலும், சபரிமலை செல்லும் பக்தர்களாலும் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. குளிப்பதற்குப் பாதுகாப்பானது என்று சொல்லப்படும் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறார். அவர் மற்றும் அவரது மனைவி அருவியில் குளிக்கச் சென்ற நிலையில், அவர்களின் 4 வயது குழந்தையான ஹரிணி மட்டும் அருவிக்கரையின் ஓரத்தில் தனியாக நின்றிருக்கிறார். அப்போது ஆர்ப்பரிக்கும் தண்ணீர், முன்னுள்ள சிறிய தடாகத்தில் விழுந்து தண்ணீரோடு சிறுமியும் வெளியேறி அருகில் உள்ள நான்கு மடைகளின் வழியாக ஆழமான பள்ளத்தில் குழந்தை சென்றுவிட்டது.
நேற்று தண்ணீரின் இழுவையும் போக்கும் அதிகமாக இருந்ததால், அதனைக் கண்ட சிறுமி ஆர்வத்துடன் தண்ணீர் தடாகத்தில் இறங்க, தண்ணீரின் இழுவையில் சிக்கிய குழந்தையை அருவித் தண்ணீர் வெளியேறும் மடை வழியாக இழுத்துச் சென்று ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசியிருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியில் பதறிய குழந்தையின் பெற்றோரும் சுற்றுலாப் பயணிகளும் கூச்சலிட்டு இருக்கிறார்கள். இதைக் கண்டு துணிச்சலான இளைஞர் ஒருவர் ஆழமான பாறைகளைக் கொண்ட பள்ளத்தில் இறங்கி குழந்தை ஹரிணியை மீட்டிருக்கிறார். இதில் லேசான காயத்துடன் குழந்தை ஹரிணி தப்பியிருக்கிறது. குழந்தையைக் காப்பாற்றிய இளைஞரான விஜயகுமார் தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கார் டிரைவர். அவரை சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.
தடாகத்தண்ணீர் செல்லும் நான்கு மடைகளிலும் எதுவும் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மடைகளில் தடுப்பு கம்பி வலை பொருத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த வலைகள் அதிகாரிகளால் பராமரிக்கப்படாமல் போகவே வலைகள் சேதமடைய இழுவைத் தண்ணீர் குழந்தையை சிறு மடை வழியே இழுத்துச் சென்று பள்ளத்தில் வீசிவிட்டது. ஒரு வேளை மடைக்குள்ளே குழந்தை சிக்கிக் கொண்டால் மீட்பது பெரிய சவாலாகி, ஆபத்தாகிவிடும். இந்த நிலையில் தான் குழந்தை அதிசயமாக காப்பாற்றப்பட்டுள்ளது என்கிறார்கள்.
சிறுமியைத் துணிச்சலாகத் தன்னுயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய விஜயகுமாரை ஆட்சியர் அலுவலகம் வரவழைத்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரான செந்தில்ராஜ் அவரை பாராட்டி, சால்வை அணிவித்து பரிசும் வழங்கிக் கௌரவித்தார். ஆழமான வழுக்குப்பாறைகளில் அவர் சிறுமியைக் காப்பாற்றிய அப்போதைய தருணம்; அவரின் மனநிலையைக் கேட்டறிந்து நெகிழ்ந்தார்.