தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கடந்த முறை இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில், வழக்கு நிலுவையில் உள்ள வரை பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தலங்களில் அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.
நேற்று, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் காணொளி மூலமாக இல்லாமல், நேரடி விசாரணை மூலம் வழக்கை விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடி முறையில் விசாரிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.