கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி வளாகத்தில் திடீரென்று ஒரு கோயிலை உருவாக்கி, அதனை சுற்றி ஒரு ஏக்கருக்கு அதிகமான இடத்தை ஆக்கிரத்திருப்பது பல மாணவர்கள், ஆசிரியர் வட்டாரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. அதனை உடனே அகற்றவேண்டும் என திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி பிரமுகர்களும் ஒன்றாக வந்து கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
![temple issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/qLm3UAj15hKJ8mEjw0dsxcGSmxcT0ZMmwR0gNTGMBhc/1569578936/sites/default/files/inline-images/manu%20in.jpg)
அவர்கள் கொடுத்திருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது." தமிழகத்திலேயே பழம்பெருமை வாய்ந்ததும் காவிரிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்தோடு அமைந்துள்ளது கும்பகோணம் அரசு தன்னாச்சி கல்லூரி, இக்கல்லூரியில் ஒவ்வொரு கல்வியாண்டும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். அனைத்து ஜாதி, மதங்களைச்சேர்ந்தவர்களும் இந்த கல்லூரியில் படித்து வருகின்றார்.
இந்நிலையில் இக்கல்லூரியில் உள்ள விளையாட்டு திடல் அருகில் திடீரென்று ஒருகோயிலை ஏற்படுத்தி அதற்கு மேற்கூரையாக தகர சீட்டை போட்டு, அதை சுற்றி சுமார் ஒரு ஏக்கர் இடத்தை வளைத்து முள்வேலி கட்டி ஆக்கிரிமித்து வைத்துள்ளனர். அங்கு கல்லூரியில் உள்ள சிலரும், வெளி ஆட்கள் சிலரும் வந்து வழிபாடு நடத்துகின்றனர்.
பழம்பெருமை வாய்ந்த இக்கல்லூரியில் ஏற்கனவே கட்டிடங்கள் கட்ட இடநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. இச்சூழலில் சுமார் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து வேலி போட்டிருப்பது அவர்களுக்கு கல்லூரியை வளர்த்தெடுக்கும் நோக்கமாக இல்லாமல் வேறு ஏதோ ஒரு நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.
மேலும் இது ஒரு அரசு கல்வி நிறுவனம், இங்கு ஒரு சமூகம் சார்பில் கோயிலை உருவாக்கியது சட்டத்திற்குப் புறம்பானது. இக்கோயிலை காரணம்காட்டி சுமார் ஒரு ஏக்கர் நிலம் முள் வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். எனவே கல்லூரி வளாகத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியுள்ள கோயிலையும், முள்வேலியையும் உடனே அகற்றிடவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்." கூறியுள்ளனர்.