படைக்கும் பரமேஸ்வரராகிய ஆதிசிவன் சங்கரநாராயணராகவும், உலகமாதா உமையவள் பார்வதிதேவியாரும் இரு பெரும் மூலஸ்தானங்களில் அமர்ந்து அருள் பாலிக்கும் தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரிலிருக்கும் சங்கரநாராயணர் ஆலயம் தென் மாவட்டத்தில் பிரபலம்.
மேலும் சக்திவாய்ந்த பிரபலமான சிவஷேத்திரம் என்பதால் இந்த ஆலயத்தில் நடக்கிற மகாபிரதோஷ வழிபாடுகளிலும், சிவபெருமானுக்கும் நந்திக்கும் தனிச் சிறப்பான பூஜைகள் நடக்கும். சிவ வழிபாடுகளில் முக்கியமான இந்தப் பிரதோஷ பூஜை 15 தினங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நட்சத்திர காலத்தில் நடப்பதால், அந்தப் பூஜைக்கு ஆண்கள் பெண்கள் என்று அக்கம் பக்கமுள்ள கிராமங்களிலிருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் திரளும் குறிப்பாக அதில் பெண்களே அதிக அளவில் கலந்து கொள்வர். காரணம் பிதோஷ வழிபாடு சிவபெருமானுக்காக நடத்தப்படுவது. அதிலும் அந்த ஆதிப் பரம்பொருளான ஆதிசிவனே இங்கு குடிகொண்டிருப்பது கூடுதல் விசேஷம்.
வழக்கமாக இந்தப் பிரதோஷம் நேற்று முன்தினமான சனிக்கிழமையன்று வந்ததால் சிறப்பான சனி மகாபிரதோஷ பூஜை. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர். பக்தர்கள் சிவ, நந்தி பூஜையில் கவனமாக இருக்க, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே ஊடுருவியிருந்த மர்ம நபர்கள் பெண்களின் நகையைக் குறிவைத்து, முடிச்சு வெட்டியுள்ளர் நகைகளை அபேஸ் செய்துள்ளனர்.
பக்திப் பரவசத்திலிருந்த அந்தப் பெண்கள் வெளியே வந்து பார்த்த போது தான் தங்களின் நகை அபேஸ் செய்யப்பட்டிருந்தது கண்டு பதறியிருக்கிறார்கள். இரண்டிற்கும் மேற்பட்ட சம்பவம் என்பதால் பரபரப்பு கூடி விட்டது.
சங்கரன்கோவில் பக்கமுள்ள பனவடலிசத்திரத்தின் வண்ணான் பொட்டலைச் சேர்ந்த முத்துப்பாண்டியனின் மனைவி மகாலட்சுமி (48) மற்றும் சங்கரன்கோவிலின் குமரன் தெரு சுடலை மனைவி ரதி (27) இருவரிடமிருந்த தலா 5 பவுன் தங்கச் சங்கிலிகள் என 10 பவுன் நகைகள் அபேஸ் செய்யப்பட்டிருக்கின்றன. இது குறித்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடத் தொடங்கியுள்ளனர்.
அன்றைக்கு முக்கிய நிகழ்வு பக்தர்களின் கூட்டம், குறிப்பாகப் பெண்களின் கூட்டம் அதிகம் இருந்தது. ஆனால் அதற்கேற்ப போலீஸ் பாதுகாப்பு மிகக் குறைவு. கொள்ளையடித்த நகைகளின் மதிப்பு இரண்டரை லட்சமென்றாலும், அன்றைய தினம் இரண்டிற்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். ஆனால் காவல்துறையில் 2 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். மற்றவர்கள் புகார் கொடுக்காமல், போனது போனது தானே என்றிருந்து விட்டனர். என்கிறார்கள்.
இது குறித்து நகரின் ஆர்.எஸ்.எஸ்.சின் நகர் சேவா பிரமுக் அமைப்பைச் சேர்ந்த செந்தூர்பாண்டியன் குறிப்பிடுவது, பிரதோஷத்தில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவது இயல்பு. ஆனால் ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை முறையாகச் செய்யவில்லை. ஆலயத்திலுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பெயரளவிலேயே உள்ளன. ஆனால் அவைகள் வேலை செய்யவில்லை என்பது பெரியகுறை. முறையான பாதுகாப்பிருந்தால் இது போன்ற சம்பவத்திற்கு வாய்ப்பில்லை என்கிறார்.
ஆனால் குற்ற நிகழ்வுகளைக் கண்காணிக்கிற போலீசாரின் கவனமோ, வாகன ஒட்டிகளைப் பிடிப்பது. வாகனத்தை வழிமறித்து சோதனையிடுவதிலேயே குறியாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.