கரோனா ஊரடங்கு மூலம் கோவில்களில் போடப்படும் அன்னதான திட்டத்தைப் பார்சல் மூலம் மக்களுக்கு வழங்கும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதன் மூலம் அன்னதான திட்டம் செயல்பட்டும் கோவில்களில் பார்சல் மூலமும் அன்னதானத்தைப் பொதுமக்களுக்கு வழங்கிவருகிறார்கள். அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் அன்னதானத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சாப்பாட்டை பார்சல் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிவருகிறார்கள். இப்படி வழங்கக்கூடிய அன்னதான சாப்பாட்டை வாயில் கூட வைக்க முடியவில்லை என்ற புலம்பல் அப்பகுதி மக்களிடம் பரவலாக இருந்துவருகிறது.
தினசரி அன்னதான திட்டம் மூலம் போடப்படும் புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம் எல்லாமே பெயரளவில்தான் இருக்கிறது. மேலும், சாப்பாடு நல்லாவே இல்லை, ருசியும் இல்லை. பெயருக்கு ஒருவாய் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு அப்படியே கீழே தூக்கித்தான் போட வேண்டிய நிலையில் பொது மக்கள் இருக்கிறார்கள். அப்படி போடக்கூடிய சாப்பாட்டை காக்கா கூட சாப்பிட மறுக்கிறது என்ற புலம்பலும் அப்பகுதி மக்களிடம் இருந்துவருகிறது. ஆனால், அன்னதானத்துக்கு வரக்கூடிய பொருட்களைக் கோவில் செயல் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட சிலர் பங்கு போட்டுக்கொண்டு, பெயரளவில் அன்னதானம் போடுகிறோம் என்று கணக்கு காட்டிக்கொண்டு அன்னதானத்தின் பொருள்களைக் கொள்ளையடித்து வருகிறார்கள் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது.
அதோடு கோவில் பராமரிப்பு பணியும் சரிவர இல்லை. இந்தச் செயல் அலுவலர் மாதத்துக்கு ஒருநாள், இரண்டு நாள்தான் கோவில் பக்கமே தலைகாட்டி வருகிறாரே தவிர, மற்ற நாட்களில் எட்டிப் பார்ப்பதே கிடையாது என்ற பேச்சும் பக்தர்கள் மத்தியில் பரவலாக எதிரொலிக்கிறது. கடந்த சிவராத்திரியில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்கள் விடிய விடிய திறந்திருந்தது. ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் இரவு 12 மணிக்குமேல் கோயிலைப் பூட்டச் சொல்லி செயல் அலுவலர் அடாவடியில் ஈடுபட்டதைக் கண்டு பக்தர்களும் கோவில் பூசாரிகளும் அதிர்ச்சியடைந்தவிட்டனர். அந்த அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு சந்திரசேகர் செயல்பட்டுவருகிறார்.
இந்தக் கரோனா காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசிக்க அனுமதி இல்லை. கோவிலில் மட்டும் பூஜைகள் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதுபோல் இக்கோவிலில் வெளியே பூட்டிவிட்டு கோவிலுக்குள் பூஜைகள் நடந்தாலும் கூட தனக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் கோவிலுக்குள் சாமி கும்பிட அனுமதித்துவருகிறார் என்ற பேச்சு பரவலாக எதிரொலிக்கிறது. ஐந்து வருடங்களுக்கு மேலாக இக்கோவிலின் செயல் அலுவலராக சந்திரசேகர் இருந்தும் கூட கோவில் வளர்ச்சி என்பது இல்லை. இப்படிப்பட்டவரை உடனடியாக மாற்றிவிட்டு புதிய செயல் அலுவலரை அரசு நியமித்து கோவில் வளர்ச்சிக்கும் பக்தர்களை அனுசரிக்க கூடிய ஒரு நல்ல செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக எதிரொலிக்கிறது.