தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் பல்வேறு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். அத்துடன், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில், இன்று (25/08/2021) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, மதுரையில் பென்னி குவிக் இல்லம் இடிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "பென்னி குவிக் இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகத்தைக் கட்டவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, "வயதானவர்கள் பேருந்தில் ஏறிய பின் கட்டணப் பேருந்தாக இருந்தால் இறக்கிவிடப்படுகின்றனர். எனவே, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.