கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக உள்ளவர் பாமகவைச் சேர்ந்த செல்வி ஆடியபாதம். இந்த ஒன்றியத்தின் குழு உறுப்பினராக உள்ளவர்கள் அதிமுகவைச் சேர்ந்த ஜான்சிமேரி, பச்சமுத்து, பத்மாவதி, முத்து, வள்ளி ,மனோகரன், ராஜலட்சுமி ஆகியோர் ஆவர். திமுக சார்பில் முத்துக்கண்ணு, ஏழுமலை ,தனலட்சுமி ,செல்வமணி, வளர்மதி, வெண்ணிலா ஆகிய 6 பேர். பாமக சார்பில் செல்வி, மற்றும் செல்வகுமார், விசிக தரப்பில், மேகராஜன், சுயேச்சை உறுப்பினர்கள் சிவகுமார், ஜெயசுதா, ராஜா,குமாரி, அன்னை மணி, ஆகிய 5 பேர் உட்பட மொத்தம் 21 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் ஒன்றியத்தில் உள்ள திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமையில் கூட்டம் கூடியது. காலை 11 மணி அளவில் ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி ஆடியபாதம் துணைத் தலைவர் ஜான் மேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், சிவகுருநாதன் அதிமுகவைச் சேர்ந்த பச்சமுத்து ஆகியோர் மட்டுமே கூட்டத்திற்கு வருகை தந்தனர். மற்ற 18 குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வரவே இல்லை. குழு உறுப்பினர்கள் வருவார்கள்...வருவார்கள் என நீண்ட நேரம் காத்திருந்தும் குழு உறுப்பினர்கள் வராததால் கூட்டத்தை மீண்டும் வரும் ஒன்பதாம் தேதி நடத்துவது என ஒத்திவைப்பதாகக் குழு தலைவர் செல்வி ஆடியபாதம் அறிவித்தார்.
ஏன் 18 குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர், என்ன காரணம் என்று விசாரித்தனர். அப்போது ஒன்றியத்தில் போதிய அளவு நிதி இருந்தும் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதிகளில் மக்களுக்கான திட்டப் பணிகளைச் செய்வதற்குக் குறைவான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் வரை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாகக் குழு உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய குழு கூட்டத்தை 18 உறுப்பினர்கள் புறக்கணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.