திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் தலைமையாசிரியரும் ஆசிரியரும் தரையில் உருண்டு புரண்டு சண்டை போட்டுக்கொண்டே வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் அண்ணாமலை மற்றும் அதே பள்ளியில் இளநிலை ஆசிரியராகப் பணியாற்றி ஒருவரும் பணி நேரத்தில் ஏற்பட்ட தகராறில் பள்ளி வளாகத்திலேயே சட்டையைப் பிடித்துக்கொண்டு உருண்டு பிரண்டு தாக்கிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் சுற்றியிருந்த சக ஆசிரியர்கள் சண்டையை விலக்கி விட முயன்ற நிலையில் யாரோ ஒருவர் இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படி தலைமையாசிரியரும் ஆசிரியரும் பள்ளி வளாகத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்ட தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குச் சென்ற நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியர் தலைமையாசிரிடம் விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறை கொடுக்க மறுத்ததால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.