Skip to main content

பாலியல் புகாரில் சிக்கி சஸ்பென்ட் செய்யப்பட்ட ஆசிரியருக்கு 20 நாளில் மீண்டும் பணி..!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Teacher who got suspended had job again

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் வரகுணபாண்டியன். கடந்த ஜனவரி மாதம் இவர் மீது சில மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர்.

 

இது தொடர்பாக அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், முதன்மை கல்வி அலுவலருக்கு எழுதிய புகாரினை தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஆசிரியர் ஒழுங்கு நடவடிக்கை சட்டப்பிரிவின் படி வரகுணபாண்டியனை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.

 

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி சம்மந்தப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார் முதன்மை கல்வி அலுவலர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றல் உத்தரவு தந்து உத்தரவிடப்பட்டுள்ளது, அவரும் பணியில் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

 

தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர் கடிதம் தந்தது பிப்ரவரி 16ஆம் தேதி. தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, உடனே அவருக்கு வேறொரு பள்ளியில் பணி வழங்கியது பிப்ரவரி 17ஆம் தேதி. ஒரேநாளில் பாலியல் புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டவரை, விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் மீண்டும் பணியில் அமர்த்தியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுப்பற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “அவர் மீதான குற்றச்சாட்டுக்கு வேறு ஒரு அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவோம். அதற்கான பணிகள் நடக்கிறது. அதேநேரத்தில் ‘நான் தவறு செய்யவில்லை’ எனச் சொல்லி கடிதம் தந்து கேட்டுக்கொண்டார் அந்த ஆசிரியர். அதனைப் பரிசீலனை செய்து அவருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில், தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்படும்.” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்