கலைச்சேவை செய்துவிட்டு, உணர்வுபூர்வமாக பொதுச்சேவையில் இறங்கிவிட்டார் நடிகை கவுதமி.
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருதுநகர் வந்திருந்த கவுதமி “நம் கையில் இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. இது போய்விட்டால், பிறகு ஒன்றுமே இல்லை.” என்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கவுதமி வெளிப்படுத்திய கருத்துக்கள் இதோ –
“உங்களுக்குப் பிரச்சனையாமே? என்று சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆமாம். புற்றுநோய் என்று கூறியிருக்கிறேன். புற்றுநோய் என்று வாயால் சொல்வதற்கு அச்சப்படத் தேவையில்லை. நான் கேன்சர் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு, நல்லா ஸ்டடி பண்ணுன பிறகுதான் பேச வந்திருக்கேன். வெள்ளை சீனி வேண்டவே வேண்டாம். நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லம், வெல்லம், கருப்பட்டி, புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசி போன்றவற்றை ரேசன் கடைகளிலேயே மக்களுக்குக் கிடைக்கும்படி அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இயற்கைக்கு அப்பாற்பட்டு, ஃபாஸ்ட் ஃபுட் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதே உடல் ரீதியான பிரச்சனைக்கு வித்திட்டு விட்டோம். ஃபாஸ் ஃபுட்டால் உடலுக்குக் கெடுதல் என்பது இந்தத் தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அடுத்த தலைமுறை நிச்சயம் தெரிந்துகொள்ளும். இயற்கை வாழ்வியல் முறை குறித்து அவர்கள் சொன்னார்கள்; இவர்கள் சொன்னார்கள்; நான் சொன்னேன் என்று யாரும் அப்படியே ஏற்றுக்கொள்ளக் வேண்டியதில்லை. அறிவியல் பூர்வமான உண்மையை நானே கூறினாலும், அது சரிதானா என்று நீங்களும் ஆராய வேண்டும். உண்மையைத் தெரிந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும். பொது அறிவு அவசியம். யாருடைய பேச்சைக் கேட்கலாம். யாருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.
குட்கா முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு, கடைகளில் கிடைக்கவில்லையென்றாலும், வேறு வடிவிலான புகையிலைப் பொருட்களை மனிதர்கள் தேடிச் செல்வார்கள். நம்மைப் பற்றி நம்மைக்காட்டிலும் வேறு யாருக்கும் அதிகமாகத் தெரியாது. மது போதையில், அறியாமல் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. குடித்துவிட்டால், என்ன பண்ணுகிறேன் என்று எனக்கே தெரியாது என்று ஒருவர் சொல்வதை ஒத்துக்கொள்ளவே முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே சட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும். 5 செகன்டோ, 5 நிமிடமோ, நாக்கு டேஸ்ட்டுக்காக நம் வாழ்க்கையைச் சீரழித்துவிடக் கூடாது. சுய கட்டுப்பாடு தேவை. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனிமனித பொறுப்பு இருக்கிறது.” என்று விரிவாகப் பேசினார் கவுதமி.
நடிகையே ஆனாலும், நல்லது சொன்னா கேட்டுக்கணும்!