எங்கெல்லாம் மதுக்கடைக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த ஆர்.தனசேகரன் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுவால், ஒருவரது குடும்பமே சீரழிந்து விடுகிறது. இந்தியாவில், 33 லட்சம் பேர் மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில் 18 லட்சம் பேர், தமிழகத்தை சேர்ந்தவர்கள். மக்களின் உடல் நலனையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் கடமை அரசுக்கு உள்ளது. மதுவுக்கு எதிராக பலத்த குரல்கள் எழும்பி உள்ளன. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், கள்ளச்சாராயம் பெருக்கெடுக்கவில்லை, குற்றங்கள் குறைந்துள்ளன.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், மதுக் கடைகளை திறக்கக் கூடாது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரி வருகின்றனர். மேலும் மதுப் பழக்கத்தை பலரும் கைவிட்டுள்ளனர். அரசுக்கும் இது தொடர்பாக, மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, ஊரடங்கு முடிந்த பின்னும், மதுக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா அமர்வு முன்பு இன்று வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, ஊரடங்கினால் மக்கள் குடிபழக்கத்தை மறந்துள்ளனர். எனவே பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாரயணன், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. எங்கெல்லாம் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும் தமிழத்தில் திறக்கப்படவில்லை என தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.