தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 'டாஸ்மாக்' கடைகளில் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, 'டாஸ்மாக்' நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் எந்தவொரு கூட்ட நெரிசலும் இருக்கக் கூடாது.
இரண்டு வாடிக்கையாளர்களிடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
ஒரே நேரத்தில், கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி (MASK), முகக்கவசம் (FACE SHIELD), கையுறைகள் (Gloves) மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி (SANITIZER) திரவத்தைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
கடையை கிருமிநாசினி (SANITIZER) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைப் பணியாளர்கள் வேலை நேரத்தில் கிருமிநாசினி (SANITIZER) திரவத்தை குறைந்தது 5 தடவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமிநாசினி திரவத்தைக் கொண்டு கடை சுத்தம் செய்வதுடன் கடையைச் சுற்றிலும் பிளிச்சீங் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் வெளிப்புறம் நின்று மதுப்பிரியர்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி வரச் செய்தும், முகக்கவசம் அணிந்து வரச் செய்தும் விற்பனைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கடைப்பணியாளர்கள் மதுப்பிரியர்களைக் கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்காமலும், கடையில் அதிக கூட்டம் சேராமலும், பொது இடங்களில், மது அருந்துவதைத் தடை செய்தும் பணிபுரிதல் வேண்டும்.
முகக்கவசம் அணிந்து வரும் மதுப்பிரியர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
குறைந்தது 50 வட்டங்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதன் பொருட்டு கடையின் எதிரே வரையப்பட்டிருக்க வேண்டும்.
விலைப் பட்டியல் வாடிக்கையாளரின் பார்வையில் படும்படி தொங்கவிடப் பட்டிருக்க வேண்டும்.
21 வயது நிரம்பப் பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்தல் கூடாது.
எக்காரணம் கொண்டும் மதுபானங்களை மொத்த விற்பனை செய்தல் கூடாது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.