Skip to main content

நிதி சிக்கலில் சிக்கித் தவிக்கும் சிதம்பரம் நகராட்சி!!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

சிதம்பரம் நகராட்சியில் ரூ.22 கோடியே 17 லட்சத்திற்கு வரி பாக்கி உள்ளதால், நகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்று நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,

 



சிதம்பரம்  நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் புதிய சாலை, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கு நகராட்சி மூலம் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், காலிமனை வரி உள்ளிட்ட வரிகள் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இதுபோன்ற வரி மூலம், பல்வேறு திட்டங்களுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கு வட்டி, ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

 

chithamparam



கடந்த 6 ஆண்டுகளாக வரி நிலுவைத்தொகை  கோடிக்கணக்கில் உள்ளதால், சிதம்பரம் நகராட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சிதம்பரம் நகராட்சிக்கு வரி மற்றும் வரியில்லா இடங்களில் நகராட்சி வசூல் செய்ய வேண்டிய நிலுவைத்தொகை ரூ.22 கோடியே 17 லட்சமாக உள்ளது.  சொத்து வரி மட்டும் ரூ.15 கோடியே 80 லட்சம் நிலுவையில் உள்ளது. இதில் பழைய நிலுவைத்தொகை மட்டும் ரூ.9 கோடியே 12 லட்சமாகும். இதில் 47 லட்சம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளன.  காலி மனை வரியாக ரூ.33.51 லட்சமும், தொழில் வரியாக ரூ.1கோடியே 26 லட்சமும், குடிநீர் கட்டணமாக ரூ.1 கோடியே 79 லட்சமும், குப்பை வரியாக ரூ.1 கோடியே 42 லட்சமும் நிலுவையில் உள்ளது.

 

chithamparam



நிதி நெருக்கடி காரணமாக,  நகராட்சிவாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் சிரமத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக சிதம்பரம் நகராட்சி மின்துறைக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளது. நகராட்சி ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க ரூ.50 லட்சம் தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சம்பளம் கொடுப்பதற்கே நகராட்சி நிர்வாகம் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால், நகராட்சி நிர்வாகம் வரிகளை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. வரி பாக்கி உள்ளவர்களின் வீடுகளில் நகராட்சி ஊழியர்கள், 'டிமாண்டு நோட்டீஸ்' வழங்கி, வரி பாக்கியை வசூல் செய்வதில் தீவிரம் காட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 



குறித்த காலத்தில் வரி செலுத்தவில்லை என்றால், கோர்ட் மூலம் சம்மன் வழங்குவது, சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வரி வசூல் நடந்தால்தான், மக்களுக்கான திட்டங்கள் தடையில்லாமல் நிறைவேற்ற முடியும் எனவே பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். இவருடன் நகராட்சி பொறியாளர் மகாதேவன், மேலாளர் காதர்ஹான் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்