உலக நாடுகளே கரோனா வைரஸ் பீதியில் தவித்துக் கொண்டிருக்க இந்தியாவும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்களை வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் மீறி சாலைக்கு வரும் மக்களைக் காவல்துறையினர் அறிவுரைகள் கூறி வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன. அதையும் கேட்காமல் மறுபடியும் வீதிக்கு வந்து சுற்றி வருபவர்களைப் பிடித்து வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்யும் காவல்துறையினர், அவர்களுக்கு நூதன தண்டனைகளையும் கொடுத்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூடுதல் விலைக்குக் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் கூட்டங்களும் தமிழ்நாட்டில் அலைந்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று (30/03/2020) மதியம் புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 300 பாட்டில்களுடன் அ.தி.மு.க நிர்வாகி பிடிபட்டார்.
அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகில் உள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் (29/03/2020) இரவு திறந்த அந்த கடையில் சூப்பர்வைசர் அரங்கசாமி மற்றும் விற்பனையாளர் சவுன்தராஜன் ஆகியோர் தயாராகக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த மினி டெம்போவில் மதுப்பாட்டில்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் துணையாக மேலும் இருவர் பாட்டில்களைப் பெட்டி பெட்டியாக வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த அக்கிராம மக்கள் வாகனத்தைச் சிறைபிடித்துக் கொண்டு திருவோணம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த சப்- இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொன்னதால் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் தகவல் கேட்ட போது கடைகளைத் திறக்க அனுமதி இல்லை என்று பதில் கூறியுள்ளார். அதனால் ஊரடங்கு நாளில் கள்ளத் தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப் பூட்டிய கடையில் இருந்து டாஸ்மாக் மது வகைகளைத் திருடிய சூப்பர்வைசர் மற்றும் கடை விற்பனையாளர் மற்றும் அவர்களுக்குத் துணையாக வந்த இருவரையும் கைது செய்ததுடன் 700 மதுபாட்டில்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
நாடே கரோனா வைரஸ் பயத்தில் இருக்கும் போது இந்த நேரத்தில் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன சொல்வதோ?