அரசே மதுக்கடைகளுக்கு முதலாளியாகி, அது 'டாஸ்மாக்'காக தமிழகத்தில் மாறிய பிறகுதான் மக்களிடம் குடிப்பழக்கம் 30 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்ந்தது என்றும், பத்து ஆண்களுக்கு இரண்டு பெண்கள் குடிகாரர்களாக மாறி விட்டார்கள் என்றும் மது குடிப்போர் பற்றிய புள்ளி விபரம் கூறுகிறது. குடிபழக்கம் சில ஆண்களை தற்கொலைக்கும் கொண்டு செல்கிறது. இந்த வரிசையில் பெண்களும் குடித்துவிட்டு தற்கொலை செய்வதும் தொடர்கிறது.
ஈரோடு வில்லரசம்பட்டி முத்துமாணிக்கம் நகரை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி சின்னம்மாள். 55 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சின்னம்மாளுக்கு வயிற்றில் வலியும் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில், சின்னம்மாள் சென்ற 22ம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வீட்டில் தூங்கினார். அப்போது வயிற்று வலி அதிகமானதால் விஷ பொருளை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் அதிக வலி ஏற்பட்டு சின்னம்மாள் சத்தம் போட அங்குள்ள அக்கம்பக்கத்தினர் சின்னம்மாளை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்காமல் டாஸ்மாக் குடிமூலம் நாட்களை நகர்த்திய இப்பெண் அந்த குடிமூலமே தற்கொலை செய்து வாழ்வை நிறைவு செய்து விட்டார்.