தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையை நன்றாகவே பார்க்கின்றன. எப்படி தெரியுமா? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு பிரகாரம், மலைப்பிரதேசமான கொடைக்கானலில் மதுபாட்டில்களைத் திரும்பப்பெறும் நடைமுறை, கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, மது வாங்குவோர் டாஸ்மாக்கில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகத் தந்து, பின்னர் காலி பாட்டிலைத் திரும்ப ஒப்படைத்து, அந்த 10 ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இது நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் எனக் குடிமகன்கள் ஏன் குமுறுகின்றனர்?
அரசு நிர்ணயித்த ஒரு குவாட்டர் ரம் விலை குறைந்தபட்சம் ரூ.130 ஆகும். தமிழ்நாடு முழுவதும் ரூ.5 கூடுதலாக வைத்து ரூ.135-க்கு விற்கின்றனர். கொடைக்கானல் மலைப்பிரதேசம் என்பதால், இன்னும் கூடுதலாக ரூ.5 விலைவைத்து குவாட்டர் ரம் ரூ.140-க்கு விற்றனர். மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புக்குப் பிறகு ரம் குவாட்டர் விலை ரூ.150-ஆக எகிறிவிட்டது. மது குடித்துவிட்டு ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை ஒப்படைத்தால் மட்டுமே ரூ.10 திரும்பக் கிடைக்கும்.
சுற்றுலாப் பயணிகளில் அநேகம்பேர், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு, விடுதி அறைகளிலோ, வேறு எங்கோ வைத்துத்தான் குடிக்கின்றனர். உள்ளூர்வாசிகளும்கூட, மது பாட்டில்களை வாங்கி வீட்டுக்குப் போய்த்தான் குடிக்கின்றனர். ஒரு பாட்டிலுக்கு ரூ.10 திரும்பக் கிடைக்கும் என்பதற்காக, அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளோ, உள்ளூர்வாசிகளோ திரும்பவும் அதே டாஸ்மாக் கடைக்குப் போவார்களா? ஆக, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.20-ஐ கொடைக்கானலில் மதுப்பிரியர்கள் தந்தாக வேண்டியதிருக்கிறது.
‘இது அநியாயமல்லவா?’ என்று மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் வாதிடும்போது “கட்டிங் கொடுக்கணும். போலீஸ் வந்தால் சரக்கு கொடுக்கணும். நாங்க எத்தனை பேரைத்தான் சமாளிக்கமுடியும்? தமிழகத்தில் இரவு நேரத்தில் போலீஸ் ஏட்டையா வந்து மாமூல் வாங்காத டாஸ்மாக் கடை உண்டா? பார் உண்டா?” எனத் தங்கள் பங்கிற்குப் புலம்பித் தள்ளுகிறார்கள்.
மது சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாலோ என்னவோ, அனைத்துத் தரப்பிடமிருந்தும் புலம்பல் சத்தம் கேட்கிறது.