கரோனா ஊரடங்கால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தால் மக்கள் வேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தும் டாஸ்மாக் கடைகளை மட்டும் அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளது தமிழக அரசு. இதனால் ஊரடங்கு காலத்தில் இல்லாத விபத்துகள், குடும்ப பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது. பல குடும்ப பெண்கள் குமுறுகிறார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளை மீண்டும் மூடு என்று போராட்டங்களும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை நகரை ஒட்டியுள்ள வேப்பங்குடி ஊராட்சியில் உள்ள கல்லுப்பள்ளம் என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று ஜனவரி 26 நடந்த கிராம சபைக்கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ராமதாஸ் மாவட்ட ஆட்சியரிடம் தீர்மான நகலுடன் மனு கொடுத்தார். ஆனால் அந்த மனுவுக்கு எந்த மரியாதையும் இல்லை. கிராம சபை தீர்மானம் என்பது ஆகச்சிறந்தது என்று சொல்வதெல்லாம் பொய்யானது.
இந்த நிலையில் கரோனா ஊரடங்கால் கல்லுப்பள்ளம் டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு கடந்த வாரம் திறந்த போது அரை நாளில் அத்தனை மதுபாட்டில்களும் விற்றுத் தீர்ந்தது. அதனால் அருகில் உள்ள அரசடிப்பட்டி மதுக்கடைக்கு படையெடுத்தனர்.
இப்படி கிராம சபை தீர்மானத்திற்கு மதிப்பில்லாமல் தொடர்ந்து டாஸ்மாக் கடை செயல்படுவதால் விவசாய மற்றும் விவசாய கூலி தொழிலாளர் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த கிராம இளைஞர்கள் இன்று காலை கடை முன்பு சமூக இடைவெளிவிட்டு தர்ணா அமர்ந்து முழக்கங்களை எழுப்பியதுடன் பதாகைகளும் பிடித்திருந்தனர். சாமிக்கே ஊரடங்காம்.. சாராயத்துக்கு விதிவிலக்கா! மதுவால் கிடைக்கும் வருமானம் நாட்டுக்கே அவமானம்! ஏழைகளை அழித்துவிட்டு யாருக்காக இந்த அரசாங்கம்! என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.
சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் கோரிக்கையை மனுவாக கொடுங்கள் டாஸ்மாக் நிர்வாகம், வருவாய் துறைக்கு அனுப்பி கோரிக்கை பற்றி பரிசீலிக்க சொல்கிறோம், விரைவில் சமாதானக் கூட்டம் நடக்கும். அதில் கிராமத்தின் சார்பில் உங்கள் கோரிக்கையை வலியுறுத்துங்கள், இப்போது எழுந்து சென்று விடுங்கள் என்று கூறினார்கள். இதயைடுத்து கோரிக்கை மனுவை கொடுத்தது விட்டு, டாஸ்மாக் கடையை பூட்டவில்லை என்றால் அடுத்து சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடக்கும் என்று கூறி கலைந்து சென்றனர்.