கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் மே 24- ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து நேற்றும் (08/05/2021), இன்றும் (09/05/2021) 24 மணி நேரமும் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று (08/05/2021) இரவு முதல் இன்று (09/05/2021) காலை வரை சென்னையில் இருந்து 3,325 பேருந்துகள் இயக்கப்பட்டு 1.33 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், சென்னையில் இருந்து 4,816 சிறப்புப் பேருந்துகள் இன்றும் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் முழு ஊரடங்கின் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகலும் மூடப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்றும், நாளையும் (09/05/2021) கூடுதலாக, இரண்டு மணி நேரம் அதாவது மாலை 06.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பால், டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அமோக நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று (08/05/2021) ஒரே நாளில் ரூபாய் 426.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூபாய் 100.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூபாய் 82.59 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மதுரை மண்டலத்தில் ரூபாய் 87.28 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூபாய் 79.82 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூபாய் 76.12 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.