வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் திருடி, நண்பர்களுக்கு மது விருந்து வைத்து மகிழ்ந்த நான்கு இளைஞர்களைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் வடக்குத் தோப்பு தெருவில் இயங்கிவந்த டாஸ்மாக் கடையின் பூட்டை, கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதியன்று உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதேபோல, வடுவூர் அருகே உள்ள எடமேலையூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான 21 மடிக் கணினிகளை கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் வடுவூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இப்படி பல இடங்களில் நடந்த மர்மநபர்களின் கைவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் தினரிவந்த போலீசார், இன்று வாகனங்களைச் சோதனை செய்தபோது இரண்டு வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், பிடிபட்ட இருவரும் கூட்டாளிகளோடு சேர்ந்து வடக்குத்தோப்பு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிவந்து மற்ற கூட்டாளிகளுக்கு காட்டுக்குள் வைத்து மது விருந்து வைத்ததாகவும், எடமேலையூர் அரசுப் பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகளை சக கூட்டாளிகளோடு சேர்ந்து திருடி ஜாலியாக செலவு செய்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் உத்தரவின் பேரில் ஜெகன், தேவன், அரிகரன், தினேஷ் ஆகிய நான்கு நபர்களையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து 1 மடிக்கணினி மற்றும் 1 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.