திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி அரசு டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் முருகன், சித்தூர் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் அழகுமணி ஆகிய இருவரும் தங்கள் கடைகளில் மது விற்பனைப் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு இருசக்கர வாகனத்தில் வத்தலக்குண்டு வங்கி நோக்கி வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் எம்.வாடிப்பட்டி குறுக்கு சாலையில் வந்துக் கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த இரண்டு இளைஞர்கள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்கள், சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளனர். மோதிய வேகத்தில் அந்த இளைஞர்கள், வந்த வாகனம் நிலைத் தடுமாறியதில் இளைஞர் இருவரும் கீழே விழுந்தனர். அதனைப் பார்த்த மேற்பார்வையாளர்கள் இருவரும் இளைஞர்களைத் தூக்க முற்பட்ட போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இளைஞர்கள் முருகன் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவி விட்டு, அவர் கையில் வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தைப் பறித்தனர்.
அழகுமணி ஓடிவந்த போது, கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். இச்சம்பவத்தில், மேற்பார்வையாளர் அழகுமணி கொண்டு வந்த ரூபாய் 2.50 லட்சம் பணம் பெட்டியில் இருந்ததால், அவை கொள்ளையர்களுக்கு தெரியாமல் தப்பியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, டாஸ்மார்க் மேற்பார்வையாளர் முருகன், பட்டி வீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகன் செய்த விசாரணையில் மேற்பார்வையாளர் முருகன் தனது உள்ளாடையில் ரூபாய் 25 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கொள்ளை சம்பவம் நடந்தது தொடர்பாகவும், முருகன் உள்ளாடைக்குள் பணத்தை மறைத்து வைத்திருந்தது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பணம் கொள்ளை போனது குறித்து முருகன், மாவட்ட டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். ஆனால் டாஸ்மார்க் நிறுவனமோ, கொள்ளை போனதாக சொல்லப்படுகிற டாஸ்மாக் பணத்தை பேங்கில் கட்டிவிட்டு வேலையைக் காப்பாத்திக்கோ. அப்புறம் விசாரணையைப் பாத்துக்கலாம் என்று பதில் வர, பணத்தைப் புரட்ட காவல்நிலையத்தில் இருந்து ஓடினார் முருகன். உதவிக்கு வந்த சூப்பர்வைசர்கள் விக்கித்து போய் நின்றனர்.