தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்பு குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களிமேடு பகுதிக்கு இன்று காலை 11.30 மணிக்கு நேரில் செல்கிறார். முதல்வர் நேரில் செல்வதுடன், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தஞ்சை கோவில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனை அளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில் என் எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். தமிழகத்தின் தஞ்சாவூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். ” என்று பதிவிட்டுள்ளார்.