Skip to main content

தஞ்சை தேர் விபத்து : இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர் (படங்கள்)

Published on 28/04/2022 | Edited on 28/04/2022

 

தஞ்சாவூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் மடத்தின் கோயிலில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தன்று சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 10 அடி உயரம் கொண்ட பல்லக்கு தேரை, திருவிழாவில் கலந்துகொண்ட சிறுவர்கள், பெரியவர்கள் ஏன ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 

 

இந்நிலையில், அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தேரின் ராட்சத சக்கரம் திடீரென பள்ளத்தில் இறங்கியுள்ளது. அதேசமயம் அந்த இடத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின் கம்பியானது தேரில் உரசியுள்ளது. இதனால் தேரில் பாய்ந்த மின்சாரம் அதனை பிடித்திருந்த பக்தர்களை தாக்கியதோடு, தேர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. 


இந்த கோர விபத்தில் சந்தோஷ், ராஜ்குமார் என்ற இரு சிறுவர்கள் உட்பட  11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் கவலைக்கிடமான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.


இந்த விபத்து குறித்து தகவலறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாலையிலேயே இரங்கல் தெரிவித்ததோடு, தஞ்சை தேர் திருவிழாவில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் அரசு சார்பாக தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையளிக்கவும் ஆணையிட்டார். சட்டசபையில் இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


இந்த நிலையில், நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் சட்டசபையில் இருந்து நேராக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் 2.30 மணிக்கு மதுரை சென்று பிறகு சாலை மார்க்கமாகவே திருச்சி வழியாக தஞ்சாவூர் அருகிலுள்ள களிமேடு கிராமத்திற்கு சென்றடைந்தார்.


அங்கு, தேர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், விபத்தில் உயிரிழந்த 14 வயது சிறுவன் சந்தோஷின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முதலமைச்சரை பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதனர். அவர்களை தேற்றிய மு.க.ஸ்டாலின், நிவாரண தொகை அடங்கிய காசோலையை வழங்கினார். பிறகு, அருகிலுள்ள தெருவில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினர்களையும்,  பின்னர் விபத்தில் உயிரிழந்த கீழவாசல் மோகன் மற்றும் பரிசுத்த நகர் நாகராஜ் ஆகியோரின் வீட்டிற்கும் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்ததோடு அவர்கள் அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகைக்கான காசோலைகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். முதல்வரை கண்டதும் கண்ணீர் மல்க கதறி அழுத சிலர், தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். 


இதன் பின்னர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமுற்றவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


முதலமைச்சரின் இந்த ஆய்வின்போது அவருடன் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, சம்பவ இடத்திற்கு முன்னமே சென்றிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்