தமிழ்நாட்டில் மது போதையைத் தாண்டி இளைஞர்கள் மாற்றுப்போதையான கஞ்சா, போதைக்கான ஊசிகள், மாத்திரைகள் என பயன்படுத்திவருகின்றனர். இதனால், தங்களது உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுக்கொண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மைனர் பங்களா அருகே உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்திற்கு இரவில் சென்ற பண்ணவயல் ஹரிகரன், பட்டுக்கோட்டை ராஜேஷ் ஆகிய இருவரும், ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லி கேட்டுள்ளனர். அந்த மருந்தகத்தில் இருந்த பெண் அவர்கள் கேட்ட மாத்திரையில் குறைந்த அளவே கொடுக்க, அதிகமாக வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அப்பெண் ஊழியர், மாத்திரை சீட்டு இல்லாமல் தரமுடியாது என்று சொல்லியிருக்கிறார். அவர் அதைச் சொல்லிக்கொண்டிருந்த அதேசமயம் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த வாளை எடுத்துக் காட்டி, மருந்தகத்தினுள்ளே நுழைந்து, மாத்திரைகள் இருந்த அட்டைப் பெட்டியோடு அள்ளிக்கொண்டு வாளைக் காட்டி மிரட்டிக்கொண்டே வெளியே ஓடினார்கள். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகி பாலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி. செங்கமலகண்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து செயல்பட்டு மாத்திரைகளை அள்ளிச் சென்ற அந்த இரு இளைஞர்களைப் பிடித்துள்ளனர். அப்போது ஒருவருக்கு காலும் மற்றொருவருக்கு கையும் உடைந்து மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாத்திரையை அவர்கள் போதைக்காக உபயோகப்படுத்துவது தெரியவந்தது. மேலும், இச்சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா போலீசாரைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
இதேபோல, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் மீண்டும் போதை மாத்திரை விற்பனை தலைதூக்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின்படி, குறிப்பிட்ட மாத்திரையைப் போதை மாத்திரையாக விற்பனை செய்த ஹக்கீம், தனசேகர், சக்திவேல் ஆகிய 3 இளைஞர்களையும் கைது செய்து மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.