தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அரசாணை 82- ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு போராட்டம் வலுத்து வருகிறது.
இந்நிலையில், சேலம் உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் திங்களன்று (டிச. 21) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மணிகண்டன், சி.ஐ.டி.யு. கருப்பண்ணன், சம்மேளன நிர்வாகிகள் சேகர், ஏ.ஐ.சி.டி.யு. மணி, பொறியாளர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொ.மு.ச. நிர்வாகி மணிகண்டன் கூறுகையில், ''மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கக் கூடாது. இத்துறை தொடர்பாக வெளியிட்ட அரசாணை 82- ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். மின்வாரியத்தைத் தனியாருக்கு கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.
இதற்கிடையே, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரியத்தைத் தனியார்மயமாக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் மின் பயன்பாடு அளவீடு, கட்டணம் வசூலித்தல், பழுதுபார்ப்பு பணிகள் பாதிக்கப்படும் சிக்கலும் உருவாகியுள்ளது.