இலக்கியவாதி, பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பரதநாட்டிய கலைஞர், பாடகி மற்றும் அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட தமிழச்சி தங்கப்பாண்டியன் தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனதைத் தொடர்ந்து, சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் - மல்லாங்கிணற்றில் உள்ள தன் தந்தை தங்கப்பாண்டியனின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சரான தங்கபாண்டியன் 1997-ல் திடீரென மறைந்தபோது, ‘கையறுநிலை’ என்ற தலைப்பில், தன் தந்தைக்கு அஞ்சலிக்கு செலுத்தும் விதமாக கவிதைத் தொகுப்பு ஒன்றை எழுதினார். இதுவே இலக்கிய உலகில் அவருடைய முதல் படைப்பு ஆகும். தந்தை மீது இத்தனை பாசம் வைத்திருக்கும் தமிழச்சி, எம்.பி. ஆகி தந்தையின் நினைவிடத்தில் கால் பதித்தபோது, தன்னையும் அறியாமல் கண்ணீர் உகுத்தார். அவருடைய தாயும் மகளோடு சேர்ந்து அழுதார். உணர்ச்சிகரமான அந்தச் சூழ்நிலையில், தாய்க்கும் சகோதரிக்கும் ஆறுதலாக உடன் இருந்தார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ.
‘பாசத்துடன் தன்னை வளர்த்த தந்தை, தான் எம்.பி. ஆனதைப் பார்ப்பதற்கு முன்பாகவே மறைந்துவிட்டாரே!’ என்ற சோகத்தின் வெளிப்பாடாக அமைந்துவிட்டது, மகள் மரியாதை செலுத்திய இந்நிகழ்ச்சி!