ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று (24/02/2022) காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர், உக்ரைன் இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் எனவும், உக்ரைன் பிரச்சனையில் வெளிநாடுகள் தலையிட்டால், இதற்கு முன் சந்தித்திராத அளவிற்கு பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
ரஷ்ய அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க்கை தாக்கி வருகிறது. ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் நாட்டில் விமான நிலையங்கள், துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம்.
இதனிடையே, உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய பயணிகள் நாடு திரும்பும் வகையில் சிறப்பு விமானத்தை இந்திய அரசு தொடர்ந்து இயக்கி வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு திரும்புவதற்கு உதவித் தேவைப்பட்டால் அணுகலாம். www.nrtamils.tn.gov.in என்ற இணையதள வாயிலாக தமிழர்கள் தொடர்பு கொள்ளலாம். 044- 28515288, 96000 23645, 99402 56444 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.