அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தேனி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் கீழக்கரை வரை கடல் சீற்றமாகக் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் சுராலகோடு (கன்னியாகுமரி) 8 செ.மீ., நாகர்கோவில் (கன்னியாகுமரி) 7 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி), பேச்சிப்பாறை, மைலாடி, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.