பெரம்பலூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள முட்டை வடிவிலான உருண்டைகள் டைனோசர் முட்டைகளாக இருக்கக் கூடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாய பணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பொழுது முட்டை வடிவிலான உருண்டைகள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டவை டைனோசரின் முட்டைகளாக இருக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அரியலூர் அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தியாகராஜன் கூறும்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற முட்டை வடிவிலான உருண்டைகள் அவ்வப்போது கிடைப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற பாறைகள் கிடைக்கப்பெற்ற போது இது சுண்ணாம்புக்கல் என்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அதே வடிவிலான பாறைகள் ஏரியில் கிடைத்துள்ளதால் இந்த பாறைகள் அதே சுண்ணாம்பு பாறைகளா அல்லது டைனோசர் முட்டைகளா என்பது தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.. ஆனால் அங்கு டைனோசர் முட்டைகள் கிடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதிகமானோர் அந்த இடத்திற்கு வந்து பாறைகளை பார்த்துவிட்டு செல்கின்றனர்.