Skip to main content

''தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன்... விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக'' - டி.டி.வி.தினகரன் பேட்டி! 

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

 '' Chemical reaction in Tamil Nadu due to the release of Sasikala ... '' - TTV Dinakaran interview

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார்.

 

இந்நிலையில் பெங்களூருவில் ஓய்வெடுத்துவரும் சசிகலா, பிப்.7 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''நான்கு வருட சிறைவாசத்திற்குப் பிறகு சசிகலா, வரும் பிப்.7 -ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருகிறார். கன்னியாகுமரி முதல் திருத்தணி வரை உள்ள தொண்டர்கள் அனைவரும் ஓசூர் தமிழக எல்லையிலிருந்து சென்னை தி.நகர் வரை சசிகலாவை வழிநெடுக வரவேற்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன ஜெயலலிதா தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள், சசிகலா வரும் பெங்களூரு - சென்னை சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை. எனவே யாருக்கும் நம்மால் எந்த தொந்தரவும் இல்லாமல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாமல், காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரவேற்க வேண்டும். சசிகலாவுக்கும் எனக்கும் எந்தவித கெட்ட பெயரும் ஏற்படாத வண்ணம் நடந்துகொள்ள வேண்டும். 

 

சசிகலா ரீலிஸ் செய்யப்பட்ட அன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது. அவர் விரைவில் தமிழகம் வர இருக்கிறார் என்றவுடன், அவசர அவசரமாக நினைவிடம் மூடப்பட்டுள்ளது. இதெல்லாம், சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்ற நினைப்புதான். எப்படியும் திறந்துதானே ஆகணும். இதெல்லாம் செய்தவர்களின் தரத்தைத்தான் காட்டும். இதற்கெல்லாம் வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிப்பு கேட்கப்போகிறவர்கள், யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என காலம் பதில் சொல்லும்.

 

தீயசக்தி திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் மதுரை மேலூரில் அமமுக தொடங்கப்பட்டது. எங்கள் இயக்கம் ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்பதற்கும், அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதற்காகத்தான் போராடி வருகிறோம். அதிமுகவை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டத்தை சசிகலா மேற்கொள்வார். சசிகலா விடுதலையால் தமிழகத்தில் கெமிக்கல் ரியாக்ஷன் நடந்துள்ளது'' என்றார். 

 

சார்ந்த செய்திகள்