![salem bus police youngster arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/xz5jCr1v3jOhv3i8fPaNIwyQ2QoC9pOmrI7AKwaHcjw/1614536514/sites/default/files/inline-images/viswa2.jpg)
ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கிளம்பின. அதன்பேரில், சேலம் மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலம் வரும் ஒரு அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை சோதனைச்சாவடி பகுதியில் நின்று அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வாலிபர் ஒருவர், சாக்கு மூட்டையில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர், கிருஷ்ணகிர மாவட்டம் சூளகிரி அருகே உள்ள பேரிகை மாருதி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி விஸ்வா என்கிற விஸ்வநாதன் (32) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து, சேலம் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், விஸ்வா என்கிற விஸ்வநாதன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.