விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வெளிப்படையாக தாக்குதல் நடத்தி வன்முறையை ஏற்படுத்திய சம்பவம் 26 ந் தேதி காலை ஈரோட்டில் நடந்துள்ளது. சமீபத்தில் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்மம் பற்றியும் அதில் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்துவதாக சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு சென்ற நடிகை குஷ்புவும் பா.ஜ.க.நிர்வாகிகளும் திருமாவளவனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு எதிர்ப்பு கருத்துக்களை கொளுத்தி போட்டனர்.
திருமாவளவனை கைது செய்யக் கோரி பல ஊர்களில் காவல்நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் அவரது நண்பரான டாக்டர் நவீன் பாலாஜி என்பவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் இன்று வந்தார்.
இந்த தகவல் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிய வர அந்தப் பகுதியில் ஏராளமான இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டிருந்தனர். போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் கார் அந்த இடத்திற்கு வந்தது. உடனே பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திருமாவளவன் கார் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டது. பின்னர் பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பியபடியே இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் கோஷம் போட்டனர்.
பிறகு இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவர நிலை உருவானது. அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தது. இதில் போலீஸ் வாகனம் மீது கல் விழுந்து சேதமடைந்தது மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தது இதனால் அந்தப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனித்தனியாக தங்க வைத்தனர். திருமண நிகழ்வை முடித்து திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டார்
ஒரு கட்சியின் தலைவர் கட்சி நிகழ்ச்சி அல்லது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு வரும் போது அவரை தாக்கும் திட்டத்துடன் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் வந்ததும் அவர்களை உடனே அப்புறப்படுத்தி கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்த்ததும் வியப்பாக உள்ளது. வெளிப்படையான வன்முறையில் இறங்கும் நிகழ்வு ஜனநாயத்திற்கு ஆபத்தானது என்றும் வன்முறையின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் செயலாகத் தான் இதை பார்க்க முடியும் என்று அரசியல் வட்டாரம் இச்செயலை கண்டித்து அறிக்கைகள் விட்டுள்ளது.