“பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் பொய் சொல்லுகிறார், தவறான தகவலை வெளியிடுகிறார்” என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறைசென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா என்பன உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், " தமிழ்நாட்டில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை, இல்லவே இல்லை என தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பரப்புகிறார். கடும் கோடையை மனதில்வைத்து ஒருவாரம் கழித்து பள்ளிகளை திறக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். ஆனால் அதிமுக அரசு ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து உடனே பள்ளிகளை திறந்து மாணவர்களை பழிவாங்குகின்றனர். தண்ணீர் வசதியில்லாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவசர,அவசரமாக பள்ளிகளைத்திறக்க செய்த அமைச்சர், ஆனால் இதுவரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியனை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு சம்பளப்பிடித்தம் ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அதிமுக அரசு மேற்கொண்டுள்ளது, மேற்கொண்டுவருகிறது. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாக அதிமுக அரசு ஊழியர்களின் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதே நிலை நீடித்தால் அடுத்து வரும் தேர்தல்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நூறு சதவிகித வாக்குகளை இழக்க வேண்டி வரும். மும்மொழிக்கொள்கை என்பது இந்தியை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கையாகும் இதனை எதிர்த்து போராடுவோம் என்று அவர் கூறினார்.