கடுமையான எதிர்ப்புகளுக்கிடையேயும் மதுக்கடைகளைத் திறந்திருக்கிறது எடப்பாடி அரசு. மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என்கிற முடிவை முதல்வர் எடப்பாடி எடுத்த சூழலிலிருந்தே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது ஆளும் கட்சியான அதிமுக கூட்டணியிலுள்ள பாமக.
முடிவு எடுக்கப்பட்ட உடனே எதிர்ப்புத் தெரிவித்த பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி, ‘’ஏழைகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட காசு இல்லை. இந்த நிலையில், மதுக்கடைகளைத் திறந்தால், மனைவியின் தாலியைப் பறித்து அடகு வைப்பது உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கும். மதுக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவு தவறான நேரத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் தவறான நடவடிக்கையாகும்" என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
அன்புமணியைத் தொடர்ந்து இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் தனது அதிருப்தியைக் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ட்வீட் செய்திருக்கும் ராமதாஸ், ‘’மதுவையே முதன்மை வருவாய் ஆதாரமாகக் கொண்டிருக்கும் புதுச்சேரியில்கூட மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால், நாம்?‘’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதற்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவு அதிகரித்து வருகின்றன.